சீனிவாசா, அப்துல் கலாம் மற்றும் நான்

மூவாயிரம் பேருக்கு முன்னால் மைக் பிடித்துப் பேசியது இதுதான் முதல்முறை. அத்தனை பேரும் மாணவ – மாணவிகள். மேலையூர் சீனிவாசா மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். சீனிவாசா பாடசாலை என்று எனக்கு அறிமுகமான பள்ளி அது. அந்தப் பகுதியில் பிரபலமான பள்ளிகளுள் முக்கியமானது. நான் படித்த திவான் பகதூர் தி. அரங்காச்சாரியார் தேசிய மேல்நிலைப் பள்ளியும் அந்தப் பகுதியில் ஏகப்பிரபலம்.

சீனிவாசா பள்ளி மாணவர்களுடன் சில கலந்துரையாடல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தது பள்ளி நிர்வாகம். சில மாதங்களுக்கு முன்பு இதே பள்ளிக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்று மாணவர்களுடன் கலந்துரையாடிவிட்டு வந்திருந்தார் பா. ராகவன். இந்தமுறை நான், பத்ரி, முகில்,கே.எஸ். நாகராஜன் நால்வரும் சென்றோம்.

ஆளுக்கொரு தலைப்பு. அறிவியல் அறிஞர்களை அறிந்துகொள்வோம் என்பது என்னுடைய தலைப்பு. ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? என்ற தலைப்பு பத்ரிக்கு. படித்தே தீரவேண்டிய புத்தகங்கள் என்ற தலைப்பில் முகில். கம்ப்யூட்டரைக் கையாளக் கற்றுக்கொள்ளுங்கள் என்பது கே.எஸ்.நாகராஜனுக்கான தலைப்பு.

பத்தே முக்காலுக்கு கலந்துரையாடல் தொடங்கியது. முதலில் நான் பேசினேன்.  மேடைக்குப் பக்கத்தில் வேதியியல் ஆய்வகம். ஆனாலும் பியூரெட், பிப்பெட், டெஸ்ட் டியூப் என்று எதைப் பற்றியும் பேசமாட்டேன்,  அறிவியலுக்குள் தப்பித்தவறியும் நுழைய மாட்டேன், தொழில்நுட்பத்தின் பக்கமே செல்லமாட்டேன்.. என்று மாணவர்களுக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டுத்தான் பேசத் தொடங்கினேன். தினம் தினம் பள்ளி ஆசிரியர்களும் அதைத்தானே செய்கிறார்கள் என்பதால் இந்த ஏற்பாடு.

அறிவியல் அறிஞர்களை அறிமுகம் செய்வது.. அவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவையான சம்பவங்களைச் சொல்வது..  ஒரு குறிப்பிட்ட கண்டுபிடிப்பை நிகழ்த்தியதற்கு அவர்களுக்குத் தூண்டுகோலாக இருந்த விஷயத்தைச் சுவைபட சொல்வது, தோல்விகள் துரத்தியபோது அதிலிருந்து மீள என்ன செய்தார்கள், வெற்றியை எப்படிப் பார்த்தார்கள்.. இவற்றையெல்லாம் கதை போல மாணவர்களுக்குச் சொல்லவேண்டும்.. ஆங்காங்கே கொஞ்சம் நகைச்சுவை.. இடையிடையே மாணவர்களிடம் கேள்வி கேட்பது.. பதில் பெறுவது… பேச வைப்பது… இப்படித்தான் என்னுடைய கலந்துரையாடலை அமைத்துக்கொண்டேன்.

அப்துல் கலாம் என்ற மனிதர் மாணவர்களுடைய மனத்துக்குள் எத்தனை ஆழமாக ஊடுருவியிருக்கிறார் என்பதை விவரிக்கவே முடியவில்லை.. அடேயப்பா… இன்றைய மாணவர்களின் கனவு நாயகனாக வலம் வந்துகொண்டிருக்கிறார். உண்மையில் நான் கலாமைப் பற்றிப் பேசுவதாகவே இல்லை.  எடிசன் பற்றிப் பேசினேன்.. கிரஹாம் பெல் பற்றி.. ஹென்ரி ஃபோர்ட் பற்றி.. மேரி க்யூரி பற்றி… ஆனாலும் அப்துல் கலாமைப் பற்றி மாணவர்கள் மத்தியில் இருந்த எண்ணம் என்னைப் பேசவைத்தது. பறத்தல் தத்துவத்தை அவர் கற்றுக்கொண்டது எப்படி என்ற கதையை நான் விவரித்துச் சொன்னபோது  மாணவர்கள் மத்தியில் தெரிந்த வியப்பும் மகிழ்ச்சியும் கண்களில் நிற்கின்றன.

சீனிவாசா மேல்நிலைப் பள்ளி மாணவர்களைப் பற்றி நிறைய சொல்லவேண்டும். கற்றுக்கொள்வதற்கு அவர்கள் காட்டிய ஆர்வம் சிலிர்க்க வைக்கிறது. கேட்ட கேள்விகளுக்குப் பதில்கள் பட்டென்று வந்து விழுகின்றன. சந்தேகத்தைத் தயங்காமல் கேட்கிறார்கள். முக்கியமாக, அவர்கள் கடைப்பிடிக்கும் ஒழுங்குமுறையைச் சொல்லவேண்டும். சிரிக்கவேண்டிய சந்தர்ப்பம் வந்தால் ஐந்து நொடிகளைத் தாண்டுவதில்லை. கைத்தட்டலுக்கும் அதே ஐந்து நொடிகள்.. சீனிவாசா மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு வாழ்த்துகள். பாராட்டுகள்.

பள்ளியின் செயலர் இரா. இராஜசேகரன். நல்ல மனிதர். நிறைய புத்தகங்களை வாசிக்கக்கூடியவர் என்று கேள்விப்பட்டேன். பள்ளி ஆசிரியர்களுக்கு நிறைய சுதந்தரம் கொடுத்திருக்கிறார். நிறைய நல்ல விஷயங்களைச் செய்ய அந்தச் சுதந்தரம் பயன்படுத்தப்படுகிறது. தலைமை ஆசிரியர் எழிலரசனுக்கு நிறைய திட்டங்கள் இருக்கின்றன. நிறைய கனவுகள் இருக்கின்றன.

முக்கியமாக, பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் சுப்ரமணியனைப் பற்றிச் சொல்லவேண்டும். கிட்டத்தட்ட முப்பது வருடங்களைக் கடந்திருக்கிறது அவருடைய கல்விப்பணி. மனிதர் எத்தனை வேகமாக நடக்கிறார். எத்தனை சுறுசுறுப்பாக இயங்குகிறார். பண்பான வார்த்தைகள். பக்குவமான உபசரிப்பு. பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சில மனிதர்களுடைய முகங்கள் நமக்குள் ஒட்டிக்கொண்டுவிடும். ஆசிரியர் சுப்ரமணியன் அந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்.

நான் பேசி முடித்தபோது மணி பன்னிரண்டு. அதன்பிறகு மாணவர்கள் படித்தே தீரவேண்டிய புத்தகங்கள் என்ற தலைப்பில் முகில் பேசினார். சத்திய சோதனை. டிஸ்கவரி ஆஃப் இந்தியா. நேருவின் உலகச் சரித்திரம். பொன்னியின் செல்வன் என்று நிறைய புத்தகங்களைச் சொன்னார். படிப்பது எப்படி என்பதற்குக் கொஞ்சம் டிப்ஸ் வழங்கினார்.

உணவு இடைவேளைக்குப் பிறகு பத்ரிக்கான நேரம் தொடங்கியது. ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்? என்னென்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன? என்பது முதல் பிரிவு. படிக்கும்போதே சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் என்பது இரண்டாவது பிரிவு.

அல்வா போன்ற அற்புதமான சப்ஜெக்ட். பத்ரி வெளுத்து வாங்கிவிட்டார். கார்ட்லெஸ் மைக் என்பதால் மனிதர் மேடையை விட்டு நகர்ந்து மாணவர்களை நோக்கிச் சென்று விட்டார். பேசும்போதே நிறைய கேள்விகள் கேட்பது பத்ரியின் பழக்கம். கேள்வி கேட்ட மறுநொடி பதில் சொல்லிப் பழகியிருக்கிறார்கள் சீனிவாசா மாணவ – மாணவிகள். பத்ரிக்கும் மாணவர்களுக்கும் சரியான போட்டி.

11, 12 வகுப்பு மாணவர்களுக்கு கம்யூட்டர் தொடர்பான பயிற்சிமுகாமை நடத்தினார் கே.எஸ். நாகராஜன். கைவசம் லேப் டாப், ப்ரொஜெக்டர் எல்லாம் கொண்டுசென்றிருந்தோம். மாணவர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆர்வம் செலுத்தினார்கள்.  மாணவர்களுக்குத் தனியே. மாணவிகளுக்குத் தனியே. இரண்டு பிரிவுகளாகத்தான் பயிற்சிமுகாமை வைத்துக்கொள்ளவேண்டும் என்று ஆசிரியர்கள் திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.

பயிற்சி முகாம் முடிந்தபிறகு நாகராஜன் இரண்டு விஷயங்கள் சொன்னார். கம்ப்யூட்டர் கற்றுக் கொள்வதில் மாணவிகளை விட மாணவர்களே  அதிகம் ஆர்வம் செலுத்தினார்கள் என்பது முதல் விஷயம். வழக்கம்போலவே இந்த ஆண்டும் பெண்களே அதிக அளவில் தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்றே செய்திகள் கேட்டுப் பழகிய எனக்கு இந்தச் செய்தி ஆச்சரியத்தைக் கொடுத்தது. பிறகு இரண்டாவது விஷயத்தைச் சொன்னார். கம்ப்யூட்டர் பற்றி மாணவர்களைவிட மாணவிகளுக்கு அதிக விஷயங்கள் தெரிந்திருக்கின்றன!


You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or create a trackback from your own site.

2 Responses to “சீனிவாசா, அப்துல் கலாம் மற்றும் நான்”


  • வாழ்த்துகள்! :-)

  • அருமை!

    படிக்கும்போதே எப்படியான எதிர்பார்ப்புக்கள் இருந்திருக்கும் என்பது புரிகிறது கண்டிப்பாக எடுத்துக்கொண்ட தலைப்புக்கள் சரியான தேர்வு!

    நம்ம ஸ்கூலிலும் இது போன்று நடத்திட முயற்சிப்போமா? !

    காலம் கைகூடி வரட்டும் கண்டிப்பாக நடத்தி காட்டிடுவோம்!

    வாழ்த்துக்கள் —–> கிழக்கு டீம் :)


Leave a Reply

XHTML: You can use these tags: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>