சென்னை புத்தகக் காட்சி 2012

சென்னை புத்தகக் காட்சி 2012ல் நான் வாங்கிய புத்தகங்களைப் பற்றி எழுதவேண்டும் என்று நினைத்தேன். நாற்பத்து சொச்ச புத்தகங்கள் வாங்கினேன். வெறுமனே பெயர் பட்டியல் போடுவதைக் காட்டிலும் அவற்றின் உள்ளடக்கம் பற்றிய சில குறிப்புகளையும் இணைத்து எழுத நினைத்தேன்.

இந்த ஆண்டு நான் வாங்கிய புத்தகங்களில் சிலவற்றை நான் ஏற்கெனவே நூலகங்களில் வைத்து வாசித்திருக்கிறேன்.  அவற்றை இம்முறை வாங்கமுடிந்தது.  இப்போது பட்டியலும் சிறுகுறிப்பும்.

ஈ.வெ.கி. சம்பத்தின் பேச்சுகள் மற்றும் எழுத்துகள் அடங்கிய சம்பத் பேசுகிறேன் புத்தகம் கடந்த ஆண்டு வாங்கினேன். பேருந்தில் தவறிவிட்டது. இம்முறை மீண்டும் வாங்கினேன். அண்ணா எழுதிய எல்லோரும் இந்நாட்டு மன்னர் தொடர் கட்டுரையை விமரிசித்து சம்பத் எழுதிய அண்ணாவின் மன்னன் கட்டுரைதான் புத்தகத்தின் ஹைலைட். தமிழ் தேசிய கட்சியைத் தொடங்கிய அன்று சம்பத் ஆற்றிய உரையும் இடம்பெற்றுள்ளது. சம்பத்தின் சங்கநாதம் என்ற தலைப்பில் விரைவில் புத்தகம் ஒன்று வெளியாக இருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

ஓ.வி. அளகேசனின் வாழ்க்கையும் பணியும் என்ற புத்தகத்தை நூலகங்களில் வாசித்திருக்கிறேன். இம்முறை வாங்கிவிட்டேன். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முக்கியமான காலகட்டங்களைப் பற்றிய பதிவு இந்தப் புத்தகம். குறிப்பாக, எமர்ஜென்சியின்போது திமுக அரசு கலைக்கப்பட்டதை நியாயப்படுத்தி நாடாளுமன்றத்தில் அளகேசன் பேசிய பேச்சுகளை திமுகவினர் இப்போது படித்தாலும் கொந்தளித்துப் போவார்கள்.

மாணவர் திமுக வரலாறு. தோப்பூர் திருவேங்கடம் உள்ளிட்ட மூவர் தொகுத்த புத்தகம். மொழிப்போரில் ஈடுபட்ட மாணவர் தலைவர்கள், தொண்டர்கள் பலரைப் பற்றியும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இன்றைய அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மாணவர் திமுகவில் இருந்து வந்தவர்கள்தான். இன்று காங்கிரஸ் கட்சியில் இருக்கும் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் பற்றியும் இந்தப் புத்தகத்தில் தகவல்கள் இருக்கின்றன.

தியாகத்தின் பாதையில் திலீபனுடன் 12 நாட்கள். புத்தகக் காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் முக்கியமானது. உடனடியாகப் படித்துவிட்டேன். திலீபனுடன் பன்னிரண்டு நாள்களும் இருந்து, அவரைக் கவனித்துக் கொண்டிருந்த மு.வே.யோ. வாஞ்சிநாதன் எழுதிய புத்தகம். உருக்கமான பதிவு. தோழமை வெளியீடு.

சுயராஜ்யம் என்றொரு புத்தகம். எஸ்.எஸ். மாரிசாமி எழுதியது. ராஜாஜி, சுதந்தரா கட்சி, காமராஜர், கே ப்ளான் பற்றி பல முக்கியத் தகவல்கள் இருந்தன. மிகவும் அரதப்பழசான, விஷயகனமுள்ள புத்தகம்.

திராவிட இயக்கமும் காமராஜரும். கோபண்ணா எழுதிய புத்தகம். பெரியார், அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன், அன்பழகன், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்கள் பலரும் வெவ்வேறு காலகட்டங்களில் காமராஜர் பற்றிப் பேசியதன் பதிவு. காமராஜர் பிறந்தநாள் விழாவில் காமராஜரே என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி! என்று எம்.ஜி.ஆர் பேசியது திமுகவுக்குள் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பியது. அந்தப் பேச்சை முழுமையாகப் பதிவுசெய்திருக்கிறார் கோபண்ணா.

ஆட்டோ சங்கரின் மரண வாக்குமூலம். எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதிகள் பலருடைய மறுபக்கத்தைச் சொல்லும் புத்தகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். தொடராக வெளியானபோது நான் படிக்கவில்லை. இம்முறை புத்தகத்தை வாங்கிப் புரட்டினேன். ஆட்டோ சங்கர் எழுதிய பல கடிதங்களை வெளியிட்டுள்ளனர். அதில் ஒரு கடிதம் நான் கேள்விப்பட்டதை உண்மையாக்கியது. இன்னும் படிக்கவில்லை. நக்கீரன் வெளியீடு.

ஜெ. ஜெயலலிதா – தலைமைத்துவத்தின் புதிய பரிமாணம். ஆராய்ச்சியாளராகவும் அதிமுக அபிமானியாகவும் இருக்கின்ற தாண்டவன் என்பவர் எழுதிய புத்தகம். அதிமுக பற்றி ஆங்கிலத்திலும் சில புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார். அதிமுகவில் எம்.ஜி.ஆரின் இறுதிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் மற்றும் எம்.ஜி.ஆரின் மரணத்துக்குப் பிறகு ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வில் நடந்த சம்பவங்கள் பலவற்றையும் இந்தப் புத்தகம் தேதி வாரியாகப் பதிவுசெய்திருக்கிறது.

இவை தவிர, கோவை அ. அய்யாமுத்து எழுதிய எனது நினைவுகள், அவ்வை டி.கே. சண்முகத்தின் எனது நாடக வாழ்க்கை, கண்ணதாசனின் பேட்டிகள் தொகுப்பு, ம.பொ.சி எழுதிய புதிய தமிழகம் படைத்த வரலாறு,  விடுதலை ராஜேந்திரன் எழுதிய அரசியல் தரகர் சுப்பிரமணியன் சுவாமி மற்றும் விடுதலைப் புலிகள் மீதான அவதூறுகளுக்கு மறுப்பு என்ற இரண்டு புத்தகங்கள், கோல்வால்கரின் உரைத்தொகுப்பு, அ. இராமசாமி எழுதிய அண்ணாவின் மொழிக்கொள்கை என்று சில புத்தகங்களை வாங்கினேன்.

கார்ட்டூனாயனம் என்ற புத்தகம் என்னைக் கவர்ந்தது. அண்ணாவைப் பற்றி ஆங்கில, தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட கேலிச்சித்திரங்கள் மற்றும் கருத்துப்படங்களின் தொகுப்பு.  ட்ராட்ஸ்கி மருது உள்ளிட்ட மூவரின் தொகுப்பு. விலை ரூ 500/-. பட்ஜெட் எகிறிவிட்டதால் வாங்கமுடியவில்லை. விரைவில் வாங்கவேண்டும்!

ஜீவா என்கிற ப. ஜீவானந்தம்!

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டு இருந்த காலம் அது. ஜீவா, ராமமூர்த்தி உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தலைமறைவாகச் செயல்பட வேண்டிய நிர்பந்தம் உருவாகி இருந்தது. அப்போது  என்.எஸ்.கிருஷ்ணன், எம்.ஆர்.ராதா, அவ்வை டி.கே.சண்முகம் சகோதர்கள் உள்ளிட்டோ ஜீவாவுக்கு அடைக்கலம் கொடுத்து வந்தனர். தங்களால் முடிந்த உதவிகளையும் ஜீவாவுக்குச் செய்துகொடுத்தனர்.

கம்யூனிஸ்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த சூழலில் ஒருமுறை என்.எஸ். கிருஷ்ணனின் வீட்டுக்கு வந்திருந்தார் கலைஞர் கருணாநிதி. அவரை வரவேற்று மாடிக்கு அழைத்துச் சென்று பேசிக் கொண்டிருந்தார் என்.எஸ்.கே. அந்த அறையில் ஜன்னல்கள் எல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. அறைக்குள் நுழைந்தவுடன் விளக்குகளைப் போட்டார் என்.எஸ்.கே.

‘பகல் நேரத்துல ஜன்னலைத் திறந்து வைச்சாலே வெளிச்சம் வருமே.. ஏன் சாத்தி வச்சிருக்கீங்க?’ என்று கேட்டார் கலைஞர்.

‘இது காமெடியன் வீடுதானே.. எல்லாமே காமெடியாத்தான் இருக்கும்’ என்று சட்டென்று சொன்னார் என்.எஸ்.கே.

இருவருமே சிரித்துக் கொண்டனர்.

‘இப்போது உங்களுக்கு ஒரு பண்டாரத்தை அறிமுகப்படுத்தப் போறேன்.. பார்த்தால் பண்டாரம் மாதிரி தெரியும். ஆனா ஆள் பெரிய மாயாவி’ என்றார் என்.எஸ்.கே.

கலைஞருக்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தார்.

‘பண்டாரம் எங்கே?’ மிகவும் ஆர்வமாகக் கேட்டார் கலைஞர்.

‘பாருங்க.. இப்போ வரப்போறார்’ என்று சொன்ன என்.எஸ்.கே சட்டென்று தனது கைகளைத் தட்டினார்.

எதிரே இருந்த மஞ்சள் நிற திரைச்சீலையை ஒதுக்கிவிட்டு ஒரு உருவம் இவர்களை நோக்கி வந்தது.

நல்ல கட்டுமஸ்தான உடல். மொட்டைத்தலை. இடுப்பில் காவி வேட்டியும், தோளில் காவித் துண்டும் போட்டிருந்தது அந்த உருவம். கழுத்தில் ருத்திராட்ச மாலை, நெற்றி நிறைய விபூதி வேறு. பார்ப்பதற்கு பக்திப் பழமாக இருந்தது.

‘இவர்தான் நான் சொன்ன பண்டாரம்’ என்றார் என்.எஸ்.கே.

‘அப்படியா.. சாமிக்கு எந்த ஊரு?’ விசாரித்தார் கலைஞர்.

ஆனால் பண்டாரம் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தார்.

கலைஞர் என்.எஸ்.கே வைப் பார்த்தார்.

உடனே என்.எஸ்.கே, ‘அவருக்கு காது கேட்காது. சாமி ரஷ்யாவில் இருந்து வருகிறது’ என்றார்.

நாத்திக பூமியில் இருந்து பண்டாரமா? ஆச்சரியமாக இருந்தது கலைஞருக்கு.

‘உண்மையைச் சொல்லட்டுமா?’ என்று உரத்த குரலில் பண்டாரத்தைப் பார்த்துக் கேட்டார் என்.எஸ்.கே.

உடனே பண்டாரமும் தலையசைத்து தனது சம்மதத்தைத் தெரிவித்தார்.

‘அரசாங்கத்துக்கு எதிராக கிளர்ச்சி செய்து, அரசாங்கத்தால தேடப்பட்டு வர்ற கம்யூனிஸ்டுகள் இப்போ அண்டர்கிரவுண்ட் வாழ்க்கைதான் நடத்தறாங்க. அப்படிப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள்ல ஒருத்தர்தான் இந்த பண்டாரம். உங்களால அடையாளம் கண்டுபிடிக்க முடியுதா பாருங்க’ என்றார் என்.எஸ்.கே.

பண்டாரத்தை உற்றுப்பார்த்தார் கலைஞர். ஆம். அந்தப் பண்டாரம், பொதுவுடைமைத் தலைவர் ஜீவா. பிறகு சிறிதுநேரம் இருவருடனும் உரையாடிவிட்டு புறப்பட்டார் கலைஞர். என்.எஸ்.கேவின் வீட்டில் பண்டார வேடத்திலேயே சுமார் மூன்று மாதங்கள் தலைமறைவாக இருந்தார் ஜீவா!

என்.எஸ்.கே வீட்டில் தங்கியிருந்ததைப் போலவே எம்.ஆர்.ராதாவின் இல்லத்திலும், அவரது நாடகம் நடைபெற்ற கொட்டகைகளிலும் தங்கியுள்ளார் ஜீவா.

வெறும் லுங்கியைக் கட்டிக் கொண்டு அறை ஒன்றில் முடங்கிக் கிடப்பார் ஜீவா. அப்போது ராதாவின் வீட்டில் கழிவறை வாசலுக்கு அருகில் ஒரத்தில் இருந்தது. தெருவில் ஆள்நடமாட்டம் இருப்பதால் யார் கண்ணிலும் பட்டுவிடக் கூடாது என்பதற்காக இரவு நேரத்தில் மட்டுமே கழிவறைக்கு செல்ல முடியும்.

ஒருநாள் சாப்பாடு ஒத்துக்கொள்ளாமல் வயிற்றுப் போக்கு வந்துவிட்டது ஜீவாவுக்கு. அடிக்கடி கழிவறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்போது அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக அவருடைய கனத்த மீசையை மழிக்கச் சொன்னார் ராதா. ஆனால் ஜீவா அதற்கு மறுத்துவிட்டார்.

இதனால் வேறுவழியின்றி தட்டிகளை வைத்து  கொண்டு வாசலை மறைத்து, ஜீவா கழிப்பறைக்கு பயமின்றி சென்றுவர ஏற்பாடு செய்தார் ராதா. காலை எழுந்தவுடனேயே செய்தித்தாள்கள் கேட்பார். இதனால் சீக்கிரமாக எழுந்து, குளிரால் நடுங்க நடுங்க கடைத்தெருவுக்குப் போய் செய்தித்தாள்களை வாங்கிக் கொண்டு வருவார் ராதா.

அப்போது கீரை, மோர், வத்தல், ஊறுகாய், சாதம் இந்த ஐந்தும்தான் ஜீவாவின் மெனு. திடுதிப்பென ஏதாவது ஒரு புத்தகத்தின் பெயரைச் சொல்லி அதை உடனடியாக வாங்கிவரச் சொல்லுவார் ஜீவா. கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வார் ராதா.

எம்.ஜி.ஆர்: ஆயிரத்தில் ஒருவர்

ஏப்ரல் பதினாலு பூஜை வச்சுக்கலாம்’ என்றார் எம்.ஜி.ஆர். சுற்றி நின்ற அத்தனைபேருக்குமே ஆச்சரியம். ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர். அதை எம்.ஜி.ஆரும் பார்த்தார். ‘நான்தான் ஹீரோ; சீக்கிரம் கதையை ரெடி பண்ணுங்க. நீங்கதான் வசனமும் எழுதறீங்க’ என்று சொன்னபோது கவிஞர் வாலி கருங்கல் சிலைபோல நின்று கொண்டிருந்தார். எம்.ஜி.ஆருக்கு மிகவும் நெருக்கமான உளவுத் துறை அதிகாரி மோகன்தாஸுக்கு மயக்கம் வருவதுபோல இருந்தது.

என்ன ஆயிற்று இவருக்கு? தமிழ்நாட்டின் முதலமைச்சர். எத்தனை பெரிய பொறுப்புகள் நிறைந்த பதவி. சட்டம். ஒழுங்கு. மக்கள். பிரச்னை. திட்டங்கள். கோப்புகள். ரசிகர்கள். தொண்டர்கள். எத்தனை எத்தனை நெருக்கடிகள். எத்தனை எத்தனை பிரச்னைகள். எப்போது சறுக்குவார் என்று காத்துக்கொண்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. எல்லாவற்றையும் சமாளிக்கவேண்டும். மூச்சுவிடக்கூட நேரம் இல்லை. இருந்தும் நடிக்கிறேன் என்கிறாரே? என்ன மனிதர் இவர்? பதவிக்கு வந்த ஒரே ஆண்டில் (1978) அதிகாரம் அலுத்துவிட்டதா? நாற்காலி கசந்துவிட்டதா? சொடக்கு போடும் நேரத்தில் எதையும் சாதிக்கும் வித்தை தெரிந்தவர் எம்.ஜி.ஆர் என்பது வாஸ்தவம்தான். ஆனாலும் இது சாத்தியமா?

சாத்தியம்தான் என்று புன்னகை செய்தார் எம்.ஜி.ஆர். அந்தப் புன்னகையில் தெறித்து விழுந்த பொறி மற்றவர்களை ஆக்கிரமித்தது. கதை தயாரிக்கும் பணிகள் தொடங்கின. பத்து நாள்கள். கதை தயார் என்ற விவரத்தைத் தொலைபேசியில் சொன்னார் வாலி. நல்லது. அன்று இரவே வாலி வீட்டுக்கு வந்தார் எம்.ஜி.ஆரின் உறவினர் கே.என். குஞ்சப்பன்.

‘நாளைக் காலை ஆறு மணிக்கு முதலமைச்சருடன் நீங்கள் மதுரை செல்கிறீர்கள். விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போகும் வழியில் முதலமைச்சரிடம் கதையைச் சொல்லிவிடுங்கள். காரியம் முடிந்ததும் நீங்கள் விமானத்திலேயே சென்னை திரும்பிவிடலாம்.’

ஆகாயத்தில் பறந்தபடியே வாலி சொன்ன கதையை எம்.ஜி.ஆர் கவனம் கலையாமல் கேட்டார். பிறகு சில திருத்தங்களைச் சொன்னார். படத்துக்கான தலைப்பை வாலியே சொன்னார்: ‘உன்னை விடமாட்டேன்!’

விடமாட்டார்கள் என்றார் மோகன்தாஸ். எதையும் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடக்கூடியவர் அவர். எம்.ஜி.ஆருக்கு எதிரே அப்படிப் பேச அனுமதிக்கப்பட்ட ஒரே நபரும் அவர்தான். அப்படிச் சொன்னதற்குக் காரணம் இருந்தது. 1971 சட்டமன்றத் தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்த சமயம் அது. வெற்றிக்குக் காரணகர்த்தாக்களுள் ஒருவரான எம்.ஜி.ஆருக்கு அமைச்சர் பதவி நிச்சயம் என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருந்தது.

வெற்றிச் செய்தி வந்தபோது எம்.ஜி.ஆர் காஷ்மீரில் ‘இதயவீணை’ வாசித்துக் கொண்டிருந்தார். தொலைபேசி மூலம் தன் விருப்பத்தை கருணாநிதியிடம் நாசூக்காகச் சொல்லிவிட்டு, தனிவிமானம் மூலம் சென்னை வந்தார். ஆனால், ‘திரைப்படத்தில் நடித்துக்கொண்டே அமைச்சராக இருப்பது சரியாக இருக்காது. அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளாது’ என்று காரணம் சொல்லப்பட்டு அவருடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

அமைச்சர் பதவிக்கே இத்தனை எதிர்ப்பு என்றால் முதலமைச்சர் பதவி எத்தனை முக்கியமானது. மத்திய அரசு இதை சகித்துக் கொள்ளுமா? அதிலும் பிரதமர் மொரார்ஜி தேசாய் கொஞ்சம் கெடுபிடியான மனிதர். சினிமா சங்கதிகளை எல்லாம் அவர் அனுமதிக்கவே மாட்டார். தவிரவும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்குச் சவால் விடக்கூடிய காரியம் இது. ஆகவே வேண்டாம்.

எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எல்லோருமே கிட்டத்தட்ட இதே ரீதியில்தான் ஆலோசனை சொன்னார்கள். எல்லோருக்கும் புன்னகையை மட்டுமே பதிலாகத் தந்தார் எம்.ஜி.ஆர்.

காலை எழுந்ததும் தொலைபேசியை எடுத்து சில எண்களை சுழற்றினார் எம்.ஜி.ஆர்.

‘பேப்பர் பார்த்தீர்களா? இண்டியன் எக்ஸ்பிரஸ்?’

எதிர்முனையில் இருந்தவர் தட்டுத்தடுமாறி பேப்பரை எடுத்துப் பார்த்தார். அவர், முதல்நாள் எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை சொன்னவர்களுள் ஒருவர். செய்தித்தாளின்மீது வேகவேகமாகக் கண்களை அலைபாயவிட்டார். தட்டுப்பட்டது அந்தச் செய்தி.

‘மாநில முதலமைச்சராக இருந்துகொண்டு தன்னுடைய கடமைகளுக்குக் குந்தகம் வராமல் திரு. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதில் தனக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை’ என்று பேட்டி கொடுத்திருந்தார் பிரதமர் மொரார்ஜி தேசாய்.

செய்தியைப் படித்த அத்தனை பேருமே அசந்துபோனார்கள். எம்.ஜி.ஆர் மீண்டும் சினிமாவில் நடிக்கிறார் என்ற செய்தி டெல்லி வரைக்கும் கேட்டிருந்தது. பத்திரிகையாளர்கள் அனைவரும் இந்த விஷயத்தைப் பற்றி எழுதி விஷயத்துக்கு தேசிய அந்தஸ்து கொடுத்திருந்தனர். பிரதமர் மொரார்ஜி தேசாயைச் சந்தித்தபோதும் இது தொடர்பான கேள்விகளை எழுப்பினர். அப்போது அவர் அளித்த பதில்தான் மேலே இருப்பது.

எப்படி நடந்தது இந்த அதிசயம்? யாருக்கும் தெரியவில்லை. படம் தொடர்பாக அடுத்தடுத்த வேலைகள் தொடங்கின. அப்போது புகழ்பெறத் தொடங்கியிருந்த இளையராஜா, இசையமைக்கப் பணிக்கப்பட்டார். மூத்த அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தலைமையில் படத்தின் தொடக்கவிழா ஜெகஜோதியாக நடந்தது. எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார் இளையராஜா.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதிலுமே, எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் நடிப்பதுதான் முக்கியச் செய்தி. எம்.ஜி.ஆரின் தைரியத்தைப் பத்திரிகைகள் அனைத்தும் மாய்ந்து மாய்ந்து சிலாகித்துக்கொண்டிருந்தன. அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரு கலக்கு கலக்கியது எம்.ஜி.ஆரின் அறிவிப்பு.

கருணாநிதி கொடுக்க விரும்பாத சுகாதாரத்துறையைத் தான் முதல்வரானதும் தன்வசம் வைத்துக்கொண்டு ஆட்டத்தின் முதல் காயை வெட்டினார். தற்போது முதலமைச்சர் பதவியில் இருந்துகொண்டே சினிமாவில் நடிப்பது வெட்டாட்டம்.

திடீரென எம்.ஜி.ஆரிடம் இருந்து ஒரு அறிவிப்பு வெளியானது.

‘படம் நிறுத்தப்படுகிறது.’

வட்டமடித்துக் கொண்டிருந்த அத்தனை சர்ச்சைகளும் ஒரே நொடியில் அடங்கி ஒடுங்கிவிட்டன. ‘ஏன் நிறுத்தினீர்கள்?’ என்று எவருமே கேட்கவில்லை. அவரும் சொல்லவில்லை. அதுதான் எம்.ஜி.ஆர். அவர் எடுக்கும் முடிவுக்கு அவர் மட்டுமே ராஜா. நிமிர்ந்து நிந்திக்கவும் முடியாது. குனிந்து குமுறவும் முடியாது.

முற்றிலும் புரிந்துகொள்ளமுடியாத நபர் அவர். மற்றவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்கமுடியாத காரியங்களை அநாயாசமாகச் செய்து முடிக்கக்கூடியவர் அவர். ஆனாலும் எந்த நேரத்தில் என்ன முடிவு எடுப்பார் என்று எவராலும் ஊகிக்க முடியாது. ஒரு முடிவை பகிரங்கமாக எடுப்பார். பத்தே நிமிடங்களில் அதைத் தலைகீழாக மாற்றுவார். ஆனால் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தனர் மக்கள்.

எம்.ஜி.ஆருக்குப் பல்வேறு பரிமாணங்கள் உண்டு. ரசிகர்களுக்குத் தலைவன். ஏழைகளுக்கு ரட்சகர். எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனம். படத்தயாரிப்பாளர்களுக்கு லாபதேவன். வறியவர்களுக்கு வள்ளல். தமிழ்நாட்டுப் பாட்டிகளுக்கு அவர்தான் கடவுள். இன்னும் இன்னும் நிறைய பரிமாணங்கள் எம்.ஜி.ஆர் என்ற மனிதருக்குள் புதைந்து கிடக்கின்றன. ஆச்சரியங்களாலும் சுவாரஸ்யங்களாலும் பிரமிப்புகளாலும் நிரம்பிய மனிதர் எம்.ஜி.ஆர்.

மோடியாக ஆசைப்படுகிறார் ஜெயலலிதா!

தமிழ் பேப்பர் வாசகர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். நான் கடந்த பத்து ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்துவரும் காரியங்களுள் ஒன்று துக்ளக் ஆண்டுவிழாவில் கலந்துகொள்வது. காரியம் என்று சொன்னதை யாரும் தப்பர்த்தம் பண்ணிக்கொள்ளக் கூடாது. நேற்று (14 ஜனவரி 2012) நடந்த 42வது ஆண்டு விழாவில் கூடுதல் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டேன். காரணம், விழா நடந்த இடம், வள்ளுவர் கோட்டம்.

ஆறரை மணிக்கு விழா தொடங்கும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் மூன்றரை மணிக்கெல்லாம் நியூஸ் சேனல்களில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடத் தொடங்கிவிட்டது. அத்வானியும் மோடியும் சென்னை வந்துள்ளனர்; சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசல் என்பதாக. அடித்துப் பிடித்து வள்ளுவர் கோட்டத்தைத் தொட்டபோது மணி ஐந்தரை. தேசிய பிரமுகர்கள் வந்திருந்ததால் எக்கச்சக்க பாதுகாப்புக் கெடுபிடிகள். உள்ளே நுழைந்தபோது வள்ளுவர் கோட்டம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது.

துக்ளக் சோ, மியூசிக் அகாடமியில் பேசினாலும் ஹவுஸ்ஃபுல். காமராஜர் அரங்கத்தில் பேசினாலும் ஹவுஸ்ஃபுல். வள்ளுவர் கோட்டத்தில் பேசினாலும் ஹவுஸ்ஃபுல். அடுத்த ஆண்டு நேரு ஸ்டேடியத்துக்குத்தான் போகவேண்டும் என்று நினைக்கிறேன். நல்ல விஷயம். நிறைய மெகா ஸ்க்ரீன் டிவிக்களை ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆடிட்டோரியத்தில் இடம் கிடைக்காதவர்கள் காரிடார் உள்ளிட்ட கிடைத்த இடங்களில் எல்லாம் அமர்ந்து கொண்டனர்.

வாசகர்கள் கேள்விக்குப் பதில் அளிக்கும் நிகழ்ச்சி. முதலில் கேள்வி கேட்டவர் மைலாப்பூரில் இருந்து கல்பனா. எடுத்த எடுப்பிலேயே பெண் வாசகரா என்று தனக்கேயுரிய பாணியில் அலுத்துக்கொண்டார் சோ. முக்கியமாக, ஜெயலலிதா பற்றி நக்கீரனில் வெளியான செய்தி பற்றிக் கேட்டார் ஒரு வாசகர். நக்கீரனில் அப்படித்தான் செய்தி போடுவார்கள்; அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால், அந்தச் செய்தியை ஹிந்து பத்திரிகை எடுத்து முதல் பக்கத்தில் போட்டது தன்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியதாகச் சொன்னார் சோ. நக்கீரனில் படிக்காதவர்கள் எல்லாம் ஹிந்துவில் பார்த்துத்தான் செய்தியைத் தெரிந்துகொண்டார்கள். நக்கீரனில் வெளியானதை அழகாக மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார்கள். என்ன இருந்தாலும் நக்கீரன் அளவுக்கு ஹிந்து தரம் தாழ்ந்து செயல்பட்டிருக்கவேண்டாம் என்று ஆதங்கப்பட்டார் சோ.

மன்மோகன் சிங்கையும் கபில் சிபலையும் வார்த்தைகளால் வதம் செய்துகொண்டிருந்தார் சோ. ஸ்பெக்ட்ரம் விஷயத்துல எதுவுமே நடக்கல..ராஜா மேல எனக்கு கான்ஃபிடன்ஸ் இருக்குன்னார் மன்மோகன் சிங். என்ன ஆச்சு? திஹார்ல இருக்கார் ராஜா. அடுத்து, சிம்பரம் மேல தப்பே இல்லன்றார் இப்போ. அடுத்து  அவருக்கு என்ன ஆகப்போகுதுன்னு தெரியல. மன்மோகனை விடுங்க. இந்த கபில்சிபல் இருக்காரே.. அடேயப்பா.. எதை எடுத்தாலும் இல்ல.. இல்லங்கறார். ஸ்பெக்ட்ரத்துல இழப்பா.. இல்லவே இல்லன்னார். காமன்வெல்த் ஊழல்லயும் இல்ல.. இல்லன்னார். இப்போ சிதம்பரம் விஷயத்துலயும் அதையேத்தான் செய்றார். இது எந்த அளவுக்கு போயிடுச்சுன்னா, யாரோ சிலர் சிதம்பரம் தீட்சிதர்கள்னு சொல்லிட்டு பிரசாதம் கொடுக்கப் போயிருக்காங்க..இவரு வழக்கம்போல சிதம்பரம்லாம் இல்ல இல்லன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டார்.

மேடையில் அத்வானி, மோடி என்ற பெயர்கள் அடிக்கடி உச்சரிக்கப்பட்டன. குறிப்பாக, மோடியின் பெயருக்கு வந்த கைத்தட்டல்கள் அதிரடி ரகம். அத்வானி நாட்டின் மிகப்பெரிய தலைவர் என்றும் மோடி அவருடைய லெஃப்டினண்ட் என்றும் வர்ணித்தார் சோ. மோடி போன்ற செயல்திறன் மிக்க ஒரு தலைவரை நாம் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அது மாபெரும் முட்டாள்தனம் என்றார். ரஞ்சி டிராஃபியில் சிறப்பாக விளையாடும் வீரரை தேசிய அணியில் இடம்பெறச் செய்வதுதான் புத்திசாலித் தனம். குஜராத்தில் சிறப்பாக செயல்படும் மோடியை தேசிய அரசியலுக்குக் கொண்டுவருவது புத்திசாலித்தனம் என்றார்.

அத்வானியை அண்ணாதுரையுடன் ஒப்பிட்டுப் பேசினார் சோ. கட்சிக்குள் திறமையுள்ள பல தலைவர்களை வளர்த்துவிட்டவர் அண்ணாதுரை. அவர்களுடைய முன்னேற்றம் தன்னை பாதிக்கும் என்று அவர் எப்போதுமே நினைத்ததில்லை. அந்த அளவுக்கு தன்னம்பிக்கை பெற்றவராக இருந்தார் அண்ணாதுரை. அவரைப் போலவே அத்வானியும் தன்னம்பிக்கை நிரம்பியவர். வாஜ்பாயைப் பிரதமராக முன்மொழிந்தவரே அத்வானிதான். மோடிக்கும் வழிகாட்டவேண்டியவர் அத்வானிதான் என்றார் சோ. அர்த்தம் புரிந்து ரசித்தனர் துக்ளக் வாசகர்கள்.

அன்னா ஹஸாரேவை வெளுத்துவாங்கினார் சோ. உண்ணாவிரதம் இருக்கிறேன் என்கிறார்; முடித்துவிட்டேன் என்கிறார்; உடம்பு சரியில்லை என்கிறார்; காங்கிரசை எதிர்த்துப் பிரசாரம் செய்வேன் என்கிறார்; பிறகு இல்லை என்கிறார். படுகுழப்பமான ஆசாமியாக இருக்கிறார். போதாக்குறைக்கு, கிரண் பேடி. ஒரு கொடியை வைத்துக் கொண்டு மேடைக்கு மேடை ஆட்டிக்கொண்டிருக்கிறார். கிரிக்கெட் மேட்சில் சியர் லீடர்ஸ் ஆட்டுகிறார்களே, அதைபோல என்றபோது கோட்டம் குதூகலித்தது.

இடையில் யாரோ ஒருவர் கொடுத்த துண்டுச்சீட்டு சோவிடம் தரப்பட்டது. கருணாநிதி பற்றிப் பேசச் சொல்லி அதில் எழுதி இருப்பதாகச் சொன்னார் சோ. அந்தக் காலத்துல எம்.ஜி.ஆர், சிவாஜி படத்துல நாகேஷையும் சேர்த்துக்கச் சொல்வாங்க. எதுக்கு? காமெடிக்கு. அந்த மாதிரி நான் எவ்ளோ சீரியஸான விஷயம்லாம் பேசிட்டு இருக்கேன். இடையில கருணாநிதி பத்தி பேசணுமாம்.

கருணாநிதிக்கு சமீபகாலமா என்ன பேசறதுன்னே தெரியல.. மாத்தி மாத்தி பேசறார். தான் தோத்ததுக்குக் காரணம் தேர்தல் ஆணையம்னு முதல்ல சொன்னார். அப்புறம் பார்ப்பான்லான் சூழ்ச்சி பண்ணித் தோற்கடிச்சுட்டதா சொன்னார். அதுதான் எப்படின்னு எனக்கு புரியல. ஒருவேளை விஜயகாந்த் அய்யர், சரத்குமார் சாஸ்திரிகள், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி கனபாடிகள், ஜவாஹிருல்லாஹ் அய்யங்கார் இவங்கள்லாம் சேர்ந்து ஜெயலலிதாவை ஜெயிக்க வச்சுட்டதா சொல்றாரோ? என்று சொன்னபோது வாசகர்களுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசறார் தெரியுமா? தலையில பயங்கரமான அடி விழுந்தா ஒண்ணுமே புரியாது. எங்கே இருக்கோம்னே தெரியாது. அந்த மாதிரி தேர்தல் தோல்வியால கருணாநிதி தடுமாறிப் போயிருக்கார். அதனாலதான் மாத்தி மாத்தி பேசறார். இப்போ தோனி சொல்றார் இல்லயா.. பேட்டிங்காலதான் தோல்வி..இல்ல இல்ல.. பௌலிங்காலதான் தோல்வி.. ஃபீல்டிங் மோசம்.. அம்பயர் சரியில்ல.. அந்த மாதிரி!

கருணாநிதி சொன்னதைக் கேட்டாலும் பிரச்னை, கேட்காமல் விட்டாலும் பிரச்னை. என்னுடைய பேச்சைக் கேட்டு கலைஞர் டிவியில் பங்குதாரர் ஆனதுதான் கனிமொழி செய்த தவறு என்கிறார் கருணாநிதி. அவர் பேச்சசைக் கேட்டா என்ன கதிக்கு ஆளாகணும்ங்கறதுக்கு இதைவிட என்ன பெரிய உதாரணம் வேண்டும் என்று கேட்டார் சோ. சொந்த பெண்ணுக்கே இப்படியாப்பட்ட ஆலோசனையைக் கொடுக்கற கருணாநிதி, தமிழ்நாட்டுக்கு எப்படிப்பட்ட ஆலோசனைகளைக் கொடுப்பார்னு நினைச்சுப் பாருங்க என்றார்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம்னு ஒண்ணு போட்டங்க. அதுக்கு என் பெயரை வைக்காதீங்கன்னு சொன்னாராம் கருணாநிதி. அதையும் மீறி பெயர் வைச்சுட்டாங்களாம். இப்போ அந்தத் திட்டம் காலி. ஆக, கருணாநிதி சொல்றதைக் கேட்டாலும் பிரச்னை. கேட்கலைன்னாலும் பிரச்னை. ஆக, கருணாநிதி பேச்சைக் கேட்டா உருப்பட முடியாதுன்னு அர்த்தம். அப்போ கருணாநிதி என்ன செய்யணும்? ஒதுங்கி இருக்கணும்.

கலைஞர் என்றால் என்ன? சாஸ்திரி அல்லது ஆர்டிஸ்ட். இப்போ ரஜினிகாந்த் ஒரு கலைஞர். அவரையும் சாஸ்திரின்னு சொல்லலாம். சத்யராஜ் சாஸ்திரின்னும் சொல்லலாம். கருணாநிதி நிறைய கல்யாணங்கள் பண்ணி வச்சிருக்கார். அந்த ஒரு காரணத்துக்காக அவரை சாஸ்திரின்னு சொல்லலாம் தப்பில்ல என்றார். கருணாநிதியைப் பற்றியே எதற்காக அதிக நேரம் பேசிக் கொண்டிருக்கிறார் என்று கேட்கிறீர்களா? அதற்கும் பதில் சொன்னார் சோ. “சிலதையெல்லம் மீதி வைக்கக்கூடாது, அதற்காகத்தான்!’ இதுதான் சோ கொடுத்த பதில். அத்துடன் நிறுத்தவில்லை. “இதை ஏடிஎம்கே புரிஞ்சுக்கணும்’ என்றார். எந்த அர்த்தத்தில் சொல்கிறார் என்று புரியவில்லை.

அத்வானியைப் புகழ்ந்தது போலவே மோடியையும் புகழ்ந்தார் சோ. மோடியின் ஆட்சியில் குஜராத் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றிப் பேசினார். மோடி போல சிறந்த நிர்வாகத்தைக் கொடுக்க ஜெயலலிதா ஆசைப்படுகிறார். தவறில்லை. ஆனால் அதற்கு இப்போது இருப்பது போல அல்லாமல் குறைந்தபட்சம் பத்தாண்டுகளாவது தொடர்ந்து ஆட்சியில் இருக்கவேண்டும். அப்போதுதான் மோடியுடன் போட்டி போடமுடியும் என்றார்.

அத்வானி புகழ்ந்தாயிற்று. மோடியை மெச்சியாயிற்று. கருணாநிதியைத் திட்டியாயிற்று. அடுத்து, ஜெயலலிதாவைப் பாராட்டியாக வேண்டும். ஆரம்பித்தார். சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் கட்சியில் இருந்து நீக்கிய செயலைப் பாராட்டினார். அந்தக் காரியத்தைச் செய்ததில் ஜெயலலிதா காட்டிய துணிச்சலையும் நேர்த்தியையும் சிலாகித்தார். தவறு நடக்கிறது என்று தெரிந்தால் எத்தனை துணிச்சலுடன் நடவடிக்கை எடுக்கிறார் ஜெயலலிதா என்பதற்கு இதுதான் சரியான உதாரணம் என்றார். ஜெயலலிதா தற்போது பெற்றுவரும் வெற்றி எம்.ஜி.ஆரால் கூட பெறமுடியாத வெற்றி என்றார்.

அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வதில் தமிழகத்தைச் சேர்ந்த கட்சிக்குத்தான் அதிக பங்களிப்பு இருக்கப்போகிறது என்றார் சோ. அந்த அளவுக்கு வலிமையுள்ள கட்சி அதிமுக மட்டுமே என்பதையும் சொல்லத் தவறவில்லை. ஒருவேளை பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கமுடியாத பட்சத்தில், மதச்சார்பு அது இது என்று சொல்லி மோடி பிரதமராக முடியாத பட்சத்தில் பாஜக ஆதரவு பெற்ற அமைச்சரவை அமைக்கும் சூழ்நிலை உருவாகுமானால் ஜெயலலிதாவைப் பிரதமராக்க பாஜக ஆதரவளிக்கவேண்டும் என்றார். ஆண்டுவிழாவின் அர்த்தம் அரங்கேறியது. துக்ளக் வாசகர்களுக்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்ட திருப்தி.

மன்மோகன் சிங் வீக்கான பிரதமர்னு அத்வானி சொல்லிட்டார். அவ்ளோதான். இந்த மனுஷன் எல்லா மேடைலயும் அதையே பேசறார். “என்னை அத்வானி வீக்கானவர்னு சொல்லிட்டார்… அதுல எனக்கு வருத்தம்’னு சொல்றார். யாரோ ஒருத்தர் கேட்டாங்க..தேவே கௌடாவை விடவா இவர் வீக்கானவர்னு.. ஆமாங்க.. அவராவது தூங்கணும்னு நினைச்சா தைரியமா தூங்கிடுவார். ஆனா இவர் அப்படி இல்லயே என்றார் சோ.

விழாவில் அத்வானியும் மோடியும் பேசினார்கள். கடந்தமுறை வெடிகுண்டு ஆபத்தில் இருந்து காப்பாற்றியமைக்கு ஜெயலலிதாவுக்கு நன்றி கூறினார் அத்வானி. அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான கூட்டணி இயற்கையான கூட்டணி என்றார் அத்வானி. கொம்புத் தேனுக்கு யாரும் ஆசைப்படலாம்! துக்ளக் சோவை ஒன் மேன் க்ருசேடர் என்று வர்ணித்தார் அத்வானி. அதாவது, நான் தனி ஆளாம், எனக்குப் பின்னால யாருமே இல்லயாம்.. அதைத்தான் சொல்றார் அத்வானி என்றார் குறுக்கிட்டுப் பேசிய சோ.

மோடி பேசும்போது பல தமிழ் வார்த்தைகள் வந்தன. திருக்குறள் ஒன்றையும் சொன்னார். ஊழல்வாதிகளுக்குத் தண்டனை கொடுப்பதில் தமிழக வாக்காளர்கள் திறமையானவர்கள் என்று சொன்னார் மோடி. பரவாயில்லை. 1996 மற்றும் 2006 தமிழக தேர்தல் முடிவுகளை நன்றாகவே நினைவில் வைத்திருக்கிறார் நரேந்திர மோடி. ஆச்சரியம்தான்!

மக்கள் நாயகன்!

ஜெயா டிவியில் ஒளிபரப்பாகும் திரும்பிப் பார்க்கிறேன் நிகழ்ச்சியில் இந்த வாரம் ராமராஜன் இடம்பெறுகிறார். திங்கள் முலம் வெள்ளி வரை இரவு பத்து மணிக்கு. முதல் நாள் நிகழ்ச்சி பார்த்தேன். கல்கி பத்திரிகையில் இருந்தபோது சுமார் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் ராமராஜனைச் சந்தித்துப் பேசியது நினைவுக்கு வந்தது.

கிராமிய சிறப்பிதழ் செய்யலாம் என்று முடிவுசெய்துவிட்டோம். யார்,யாரையெல்லாம் பேட்டி எடுக்கலாம், எதைப் பற்றியெல்லாம் கட்டுரை எழுதலாம் என்று பட்டியல் போட்டபோது ராமராஜனின் பேட்டி அவசியம் இடம்பெறவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவரை எப்படிப் பிடிப்பது? எங்கே தேடுவது? யாரைக் கேட்டால் விவரம் தெரியும்? படங்கள் வந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டன.. செல் வைத்திருப்பார். ஆனால் யாரிடம் கிடைக்கும்?
சில நாள்கள் கழித்து தினந்தந்தி படித்துக்கொண்டிருந்தேன். ஏதோவொரு கோவில் திருவிழாவில் நடக்க உள்ள கலை நிகழ்ச்சியில் ராமராஜன் கலந்து கொள்வதாக விளம்பரம் வந்திருந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்று கடையம் ராஜுவின் பெயர். பக்கத்தில் அவருடைய மொபைல் எண். சட்டென்று அந்த எண்ணைத் தொடர்புகொண்டேன். என்னிடம் நம்பர் இல்ல.. விஜயமுரளி நம்பர் தரேன்.. அவர்கிட்ட இருக்கும்.. என்றார்.
ராமராஜனின் பி.ஆர்.ஓவாக இருந்தவர் விஜயமுரளி. அவர் மூலம் ராமராஜனின் எண் கிடைத்தது. பேசினேன். டெல்லியில் இருப்பதாகச் சொன்னார். அவர் அப்போது எம்.பியாகவும் இல்லை. ஆனாலும் டெல்லியில் இருப்பதாகச் சொல்கிறார். நம்பித்தானே ஆகவேண்டும். சென்னை வந்ததும் பேசுவதாகச் சொன்னார். சொன்னபடியே பேசினார்.

பேட்டி வேண்டும் என்றேன். என்னை எதுக்கு சார் பேட்டி எடுக்கறீங்க? நான் நல்லாத்தான் இருக்கேன்.. ஒண்ணும் கஷ்டப்படல சார்.. வேண்டாம் சார்.. விடாப்பிடியாக மறுத்தார். தொடர்ச்சியான வற்புறுத்தலுக்குப் பிறகு சம்மதித்தார். கே.கே.நகர் பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ் பக்கத்தில் தங்கியிருப்பதாகச் சொனனர். ஃபோட்டோகிராபர் ராஜன் சகிதம் வீட்டுக்குச் சென்றேன்.

உள்ளே நுழைந்ததும் வரவேற்பறை. வாசலுக்கு இடதுபக்கம் ஒரு அறை. அங்கே முகம் பார்க்கும் கண்ணாடி தெரிந்தது. ஒருவர் அவசரம் அவசரமாக முகத்துக்குப் பவுடர் போட்டுக்கொண்டிருந்தார். ஊதிப்போன முகம். பெரிய சைஸ் கண்கள். வகிடு எடுத்து சீவிய தலை. வேட்டி கட்டிய முதியவர் ஒருவர் எங்களை வரவேற்று, உட்காரச் சொன்னார். அமர்ந்தோம்.

வந்துட்டாங்களா.. வந்துட்டாங்களா… என்ற குரல் அவ்வப்போது கேட்டது. சில நிமிடங்களில் அறையில் இருந்து வெளியே வந்தார் ராமராஜன். ட்ரேட்மார்க் சிவப்பு, பச்சை கலந்த சட்டை. வெள்ளை பேண்ட். நெற்றியில் சந்தனப்பொட்டு. கொஞ்சம் கீழே குங்குமம். கோல்ட் வாட்ச். குண்டு சைஸ் மோதிரம். வித்தியாசமான பர்ஃப்யூம்.
பரஸ்பர அறிமுகங்கள் முடிந்ததும் பேட்டி தொடங்கியது.
உண்மையில் பேட்டி கொடுப்பதில் அவருக்கு விருப்பமில்லை. என்ன சார்… என்னைய எதுக்கு சார் பேட்டி.. என்றார். கிராமிய சிறப்பிதழ்.. நீங்கள் இல்லாமல் எப்படி? என்றேன். கிராமம்னா நானா சார்… கிராமம்னா பாரதிராஜா சாரை எடுங்க.. இசைஞானியை எடுங்க.. என்னைய போயி எதுக்கு சார்.. தயக்கம் அகலவில்லை. பிறகு பேசத் தொடங்கினார்.
மேலூரில் வளர்ந்த கதையைச் சொன்னார். மூன்று ஷோவும் சினிமா பார்ப்பதற்காகவே தியேட்டரில் டிக்கெட் கிழிக்கும் வேலையில் சேர்ந்ததாகச் சொன்னார். பிறகு மானேஜர் வேலைக்கு வந்தபிறகும் சினிமா பார்ப்பதை நிறுத்தவில்லை என்றார். சிரித்துக்கொண்டேன்.
பிணமாக நடிச்சாலும் சரி, சினிமாவுல ஒரு சீன்ல வந்துடணும் என்றார். எம்.ஜி.ஆர் வெறியனாகத் திரிந்த நினைவுகளை விவரித்த போது அவர் முகத்தில் பரவசம். சினிமாவில் நடிப்பதற்காக சென்னைக்கு வந்ததையும் உறவினர்கள் உதவிய கதையையும் விவரிக்கும்போது ராமராஜனின் கண்களில் நீர் முட்டியது. பல விஷயங்கள் பேசினார். பேச்சுக்குப் பேச்சு சினிமா.. சினிமா.. சினிமா.

இடையிடையே ஒரு விஷயத்தை அழுத்திச் சொன்னார். சார்… நான் சோத்துக்குக் கஷ்டப்படல… நல்லா இருக்கேன்… கொஞ்ச வருஷத்துக்கு முன்னால பத்திரிகைகள்ல அப்படி எழுதிட்டாங்க.. நீங்களும் அப்படி பண்ணிடாதீங்க சார் என்றார்.

திடீரென வீட்டில் இருந்த பெரியவரை அழைத்தார். அண்ணே… கொண்டாங்க… என்றார். கூல்டிரிங்ஸ் சகிதம் அறைக்குள் நுழைந்தார் அந்தப் பெரியவர். ஃபேண்டா. ஒரு பாட்டில். அதைத் திறந்து இரண்டு தம்ளர்களில் ஊற்றினார். நானும் ஃபோட்டோகிராபரும் சாப்பிட்டோம். எனக்கு ஜலதோஷம் சார் என்றார்.

அறையில் இருந்த எம்.ஜி.ஆர் சிலையைப் பார்ததும் ஏனோ விஜயகாந்த் ஞாபகம் வந்தது. கேட்டேன். அவரு முதல்ல நடிகர் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா பண்ணனும்.. கட்சி ஆரம்பிச்ச பிறகு எப்படி நேர்மையா சங்கத்து வேலைகளைச் செய்யமுடியும்.. இப்படிக் கேக்குறதுக்கு எனக்கு உரிமை இருக்கு… நானும் ஒரு நடிகர் சங்க உறுப்பினர்தான் என்றார்.

திருமண வாழ்க்கை பற்றிக் கேட்டேன். நாங்க என்ன சார்.. அடிச்சுகிட்டா பிரிஞ்சோம்.. மனசு ஒத்துப்போகல.. பிரிஞ்சுட்டோம்.. என்றவர், சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப்போறேன் சார். சொந்தத்துல பொண்ணு இருக்கு… என்றார். வாழ்த்து சொன்னேன். அதிமுக சார்பாக எம்.பியானது நான் செய்த பாக்கியம் என்றார். அம்மா சொன்னா எப்போ வேணும்னாலும் கட்சிக்குப் பிரசாரம் பண்ணுவேன் என்றார்.

படம் பண்ணும் திட்டம் பற்றிக் கேட்டேன். ஆமா சார்.. ரெடியாயிட்டு இருக்கேன்.. ஸ்ட்ரிக்ட் டயட்.. அநேகமா துப்பறியும் நிபுணர் வேஷம். ஸ்க்ரிப்ட் ரெடி.. ஆரம்பிச்சுடுவோம் என்றார்.

பொருளாதாரம் பற்றிக் கேட்டேன். சாதாரணமான ஆளா இருந்தேன்னா காலைல கடையில போய் டீ சாப்பிடலாம்.. நான் போக முடியுமா சார்..வெட்கமா இருக்குன்னு சொல்லல… என்னைப் பார்த்துப் பரிதாபப்படறத என்னால ஏத்துக்கமுடியல. சாதா ஹோட்டல்ல சாப்பாடு சாப்பிடலாம்.. ஆனா சினிமாக்காரனா இருந்துட்டதால அதையும் செய்யமுடியல சார்..

உதவிக்கு ஒருத்தரை வேலைக்கு வச்சிருக்கேன். அவருக்கு சம்பளம் கொடுக்கணும். விசேஷம் வச்சிருக்கேன்னு நண்பர்கள் பத்திரிகை வைக்கறாங்க… போகணும்.. ஆட்டோல போகமுடியாது.. வாடகைக்கு கார் எடுக்கணும்.. இப்படி நிறைய எக்ஸ்ட்ரா செலவுகள்… சொந்தக்காரங்க.. பெரியப்பா, சித்தப்பா பசங்க உதவி பண்றாங்க… ஒண்ணும் பிரச்னை இல்ல.. சார்.. இப்பவும் சொல்றேன்.. நான் கஷ்டப்படல! சீக்கிரமே நம்ம படம் வந்துடும்.. எனக்கு இன்னொரு ரவுண்டு இருக்கு சார்!

0

எம்.ஜி.ஆரின் முதல் வெற்றி!

24 டிசம்பர் 2011 எம்.ஜி.ஆர் நினைவு நாள்

எதையேனும் செய்து தன்னுடைய பராக்கிரமத்தை வெளிப்படுத்த வேண்டும். துடித்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். முதல் வெற்றிக்காக சாம, பேத, தான, தண்ட முறைகள் அனைத்தையும் பயன்படுத்திவிடும் முனைப்பு அவருடைய முகத்தில் துருத்திக் கொண்டு நின்றது. வந்தது அந்த அறிவிப்பு. இடைத்தேர்தல். திமுக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திண்டுக்கல் ராஜாங்கம் மரணமடைந்ததன் எதிரொலி அது.

தேர்தல் தேதி மே 20, 1973. அசுரபலம் பொருந்திய ஆளுங்கட்சியான திமுகவை வெல்லும் நோக்கத்துக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அல்லது இந்திரா காங்கிரஸுடன் கூட்டணி அமைத்துக் களம் காண்பார் எம்.ஜி.ஆர் என்பதுதான் ஊடகங்களின் கணிப்பு. எம்.ஜி.ஆர் தெளிவாக இருந்தார். தனி ஆவர்த்தனம். வேண்டுமானால் தள்ளி நின்று கைதட்டி உற்சாகப்படுத்துங்கள்.

கன்னித் தேர்தலில் களமிறக்க எம்.ஜி.ஆர் தேர்வு செய்த நபரின் பெயர் மாயன். அவருக்கு எம்.ஜி.ஆர் சூட்டிய பெயர். மாயத்தேவர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதான தேவர் சாயத்துக்கு தொடக்கப்புள்ளி இதுதான்.

ஆளுங்கட்சியான தி.மு.க சார்பில் பொன். முத்துராமலிங்கம். சி.பி.எம் சார்பில் என். சங்கரய்யா. காமராஜின் ஸ்தாபன காங்கிரஸ் சார்பாக என்.எஸ்.வி. சித்தன். யாருக்கு எவ்வளவு பலம் இருக்கிறது என்ற ஆராய்ச்சியில் இறங்கியபோது ஏதோ ஒன்று குறைவது போல இருந்தது எம்.ஜி.ஆருக்கு.

தானே நேரில் சென்று மார்க்சிஸ்ட் தலைவர் ராமமூர்த்தியைச் சந்தித்துப் பேசினார் எம்.ஜி.ஆர். அறிக்கை வெளியானது. திமுக, காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ் ஆகியவற்றை எதிர்க்கும் நோக்கத்துடன் சி.பி.எம் தன்னுடைய ஆதரவை அதிமுக வேட்பாளருக்கு அளிக்கும். சங்கரய்யா வேட்பு மனுவை வாபஸ் வாங்க, புதிய தெம்புடன் வலம் வரத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். போதாக்குறைக்கு சி.பி.ஐயும் அதிமுக பக்கம் ஒதுங்கியது.

பிரசாரத்துக்கு இடையே இன்னொரு நெருப்பாற்றை எம்.ஜி.ஆர் கடக்கவேண்டியிருந்தது. உலகம் சுற்றும் வாலிபன். வெளியாக இருந்த தேதி மே 11. ‘படம் வெளியாகாது. ஓடவும் விடமாட்டோம். ஓடினால் சேலை கட்டிக்கொள்கிறேன்’ திமுகவின் மதுரைத் தளபதியான முத்துவிடம் இருந்து வந்த சவால் எம்.ஜி.ஆரை உசுப்பேற்றியது. வெற்றி அவசியம். அதற்கு நிதானம் அவசியம்.  அமைதி காத்தார் எம்.ஜி.ஆர்.

படம் வெளியானது. வெற்றி. அபார வெற்றி. படத்தின் வெற்றியைத் தேர்தல் வெற்றியாகவே நினைத்துக் கொண்டாடினர் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் என்ற அதிமுக தொண்டர்கள். படம் வெளியாகி சரியாக ஒன்பதாவது நாள் தேர்தல்.  ஐந்து லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகின. அதில் மாயத்தேவர் சுமார் இரண்டு லட்சத்து அறுபதாயிரம் வாக்குகளை அள்ளியிருந்தார். மாயத்தேவர் என்றால் எம்.ஜி.ஆர். காமராஜின் ஸ்தாபன காங்கிரஸ் ஒரு லட்சத்து இருபதாயிரம் வாக்குகளைப் பெற்றது. ஆளுங்கட்சியான திமுகவுக்கு மூன்றாமிடம்.

எம்.ஜி.ஆர் உருவாக்கிய அதிமுக  ஐந்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்ததற்கு இந்த வெற்றிதான் ஆரம்பப்புள்ளி.

சசிப்பெயர்ச்சி பலன்கள்!

தவறான பட்டியல் வெளியாகிவிட்டது. அந்தப் பட்டியலை யாரும் நம்பவேண்டாம். விரைவில் புதிய பட்டியல் வெளியாகும்!

இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்கும்வரை இப்படியொரு அறிவிப்பை அம்மையார் வெளியிடவில்லை. ஆகவே, நம்பிக்கையுடன் எழுதத் தொடங்கினேன்.

உடன்பிறவா சகோதரி சசிகலா உள்ளிட்ட பதினான்கு பேரைக் கட்சியை விட்டு நீக்கிய அறிவிப்பு வெளியானபோது அதிமுகவினர் அத்தனைபேருமே தங்கள் கைகளைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். நம்பமுடியாத அறிவிப்பு. ஆனாலும் நம்பித்தான் ஆகவேண்டும், அறிவித்தவர் அம்மா என்பதால்!

ஒவ்வொரு கட்சியிலும் நம்பர் டூ என்ற அலங்காரப் பதவி ஒன்று இருக்கும். ஆனால் அதற்கான அதிகாரங்கள் அனைத்தும் இன்னொருவரிடம் இருக்கும். உதாரணம் : திமுகவில் பேராசிரியர் அன்பழகன் வகிக்கும் பதவி. கட்சிப் பதவியைப் பொறுத்தவரை அவர்தான் நம்பர் டூ. ஆனால் உண்மையான நம்பர் டூ? சாட்சாத் மு.க. ஸ்டாலின்தான். காங்கிரஸ் கட்சியில் சோனியாவுக்கு அடுத்த இடம் யாருக்கு? நாட்டையே ஆளுகின்ற பிரதமர் பதவியில் இருக்கும் மன்மோகன் சிங்குக்கா? ஆமாம் என்று சொன்னால் அவரேகூட ஒப்புக்கொள்ளமாட்டார். சந்தேகமே இல்லாமல் ராகுல் காந்திதான் நம்பர் டூ.

அதிமுகவிலும் அதே நடைமுறைதான். ஜெயலலிதாவுக்கு அடுத்து கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி, நம்பர் டூ என்றால் ஓ. பன்னீர்செல்வம். ஆனால் உண்மையான நம்பர் டூ? நேற்றுவரை சசிகலாதான். கட்சிப் பதவியா, அமைச்சர் பதவியா, எதுவாக இருந்தாலும் சசிகலா மனது வைக்கவேண்டும். பதவி வேண்டும் என்றால் கட்சித் தலைவியான ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெறுவது இரண்டாம் பட்சம்தான். சசிகலாவின் நம்பிக்கையைப் பெறுவதுதான் முதல் படி. அதைச் செய்துவிட்டால் போதும். நினைத்தது கிடைத்துவிடும். நினைத்தது என்றால் கட்சிக்காரர் நினைத்தது அல்ல, சசிகலா நினைத்தது. சர்வம் சசிகலா மயம்.

கட்சி, ஆட்சி இரண்டையும் வழிநடத்துகின்ற ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளராக, தோழியாக, உடன்பிறவா சகோதரியாக சசிகலா உருமாறியது என்பது ஓரிரு நாளில் நடந்த சங்கதி அல்ல. ஏறக்குறைய முப்பதாண்டுகால உழைப்பு. வீடியோ கடைக்காரர் என்ற முறையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவால் ஜெயலலிதாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டவர் சசிகலா. அப்போது தொடங்கிய பழக்கம் மெல்ல மெல்ல நட்பாக மாறியதற்குக் காரணம் எம்.ஜி.ஆர்.

அதிமுக சார்பில் நடக்கும் கட்சிக் கூட்டங்களை வீடியோவில் பதிவுசெய்யும் வேலையை சசிகலாவிடம் ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர். ஆம், சசிகலாவின் கணவர் ம. நடராசன் மூலமாக சசிகலாவுக்குக் கிடைத்த வாய்ப்பு அது. எந்தெந்த கூட்டங்களை வீடியோவாக எடுக்கவேண்டும் என்பதை ஜெயலலிதாவிடம் கேட்டுக்கொள்ளுமாறு கூறிவிட்டார் எம்.ஜி.ஆர்.

கட்சிக்குள் ஜெயலலிதாவின் வளர்ச்சியோடு சேர்ந்து சசிகலாவின் நட்பும் வளரத் தொடங்கியது. கட்சி விவகாரங்கள் தொடர்பாக எம்.ஜி.ஆரிடம் தான் தெரிவிக்க விரும்பும் செய்திகளை சசிகலா மூலம் கொடுத்தனுப்பும் அளவுக்கு ஜெ – சசிகலா நட்பு இறுகியிருந்தது. அதுதான் பின்னாளில் கட்சியின் வேட்பாளர் பட்டியல் தொடங்கி அமைச்சரவைப் பட்டியல் வரை அத்தனை சங்கதிகளிலும் தலையிடும் அளவுக்கு வளர்ந்து நின்றது.

அதிமுகவின் அதிகாரமையமாக மாறியது சசிகலா குடும்பம். அதாவது, சசிகலா, நடராஜன், ராமச்சந்திரன், டிடிவி தினகரன், வி.என். சுதாகரன், திவாகரன், இளவரசி, டாக்டர் வெங்கடேஷ், மகாதேவன் என்று எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்தது. சசிகலா குடும்பத்தினரின் தலையீடுகள் ஆக்கிரமிப்பாக அவதாரம் எடுத்தபோது கட்சிக்குள் புகைச்சல்கள் தொடங்கின. பதவி கிடைக்காத பலரும் பொருமினர். ஆனாலும் அம்மாவின் உடன்பிறவா சகோதரியைப் பகைத்துக்கொள்வதற்கான தைரியமும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தனர்.

நடப்பதை எல்லாம் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தனர். அது, மகாமகத்தில் இருவரும் நீராடியபோதும் சரி. சட்டமன்ற நிகழ்ச்சி ஒன்றில் சபாநாயகருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சசிகலா அமர்ந்தபோதும் சரி. வளர்ப்புமகனுக்குத் திருமணம் நடந்தபோதும் சரி. சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக நீதிமன்றப் படிக்கட்டுகளை நாடியபோதும் சரி. எப்போதுமே அமைதியாக இருந்தனர்.

கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்டத்தலைவர்கள் மத்தியில் அதிருப்திகள் பொங்கிவழிந்தபோது ஜெயலலிதா தரப்பில் இருந்து எவ்வித சலனமும் இல்லை. ஆனால் தற்போது திடீரென சசிகலா உள்ளிட்டோரை அதிரடியாகக் கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார். இதன் பின்னணி என்பது குறித்து ஏராளமான ஊகங்கள் வந்த வண்ணம் உள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்குத் தண்டனை கிடைத்தால் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி ரகசிய ஆலோசனை நடத்தினார் சசிகலா என்பது பரவலாகப் படர்ந்திருக்கும் செய்தி. இல்லையில்லை, வேறு ஏதோ ஒரு பெரிய பரிவர்த்தனை தொடர்பாக இருவருக்கும் மோதல் ஏற்பட்டுவிட்டது. அதன் எதிரொலியே நீக்கம் என்கிறார்கள். எதுவும் இப்போதைக்கு உறுதிசெய்யப்படவில்லை.

சரி, சசிகலாவும் அவருடைய குடும்பத்தினரும் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டனர். இதனால் கட்சிக்கு என்ன லாபம்? அல்லது நட்டம்? கட்சி உடைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? முன்புபோல ஜெயலலிதாவால் இனி இயங்கமுடியுமா? இருவரும் மீண்டும் இணைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா? என்பன போன்ற கேள்விகள் அரசியல் அரங்கில் பலத்த விவாதங்களைக் கிளப்பியுள்ளன.

முதலில் கட்சிக்கு என்ன லாபம் அல்லது நட்டம் என்பதைப் பார்க்கவேண்டும். இந்த இடத்தில் அதிமுகவுக்கு இருக்கும் சாதி இமேஜ் பற்றிப் பேசுவது அவசியம். அதிமுக எப்போதுமே தேவர்களுக்கு ஆதரவான கட்சி; அந்தக் கட்சியில் சுலபமாகப் பதவி பெறவேண்டும் என்றால் அவர் தேவர் சாதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்; தென் மாவட்டங்களில் அதிமுக செல்வாக்குடன் இருப்பதற்கு தேவர்களின் ஆதரவுதான் காரணம் என்பன போன்ற செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் உலாவந்துகொண்டிருக்கின்றன.

அதிமுக மீதான தேவர் பிம்பம் விழுந்ததற்கான விதையை விதைத்தவர் எம்.ஜி.ஆர்தான். கட்சி தொடங்கியதும் சந்தித்த திண்டுக்கல் இடைத்தேர்தலில் அவர் நிறுத்திய வேட்பாளரின் பெயர் மாயத்தேவர். அந்த நொடியிலிருந்தே அதிமுகவின் மீது தேவர் ஆதரவு பிம்பம் விழுந்துவிட்டது. பின்னாளில் அந்தப் பிம்பத்தை நிலைநிறுத்தியதற்குக் காரணம் சசிகலா என்றே சொல்லலாம். ஜெயலலிதாவுக்கு அருகில் தேவர் இனத்தைச் சேர்ந்த சசிகலா இருப்பதால் அந்தச் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு அதிக வாய்ப்புகள் தரப்பட்டன என்பது கட்சிக்குள் இன்றளவும் இருக்கும் முணுமுணுப்பு. அதற்கான ஆகப்பெரிய உதாரணம்தான், ஓ. பன்னீர்செல்வத்துக்குக் கிடைத்த முதல்வர் பதவி.

சசிகலா தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதால் தேவர்கள் அதிமுகவில் இருந்து விலகிவிடுவார்களா என்ற கேள்வி எழும்புகிறது. இந்த இடத்தில் முக்கியமான விஷயம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். தேவர்கள் அதிமுகவை ஆதரிப்பதற்குக் காரணம் எம்.ஜி.ஆரும் அவருடைய படங்களும் அவருடைய இரட்டை இலை சின்னமும்தானே தானே தவிர சசிகலா அல்ல. இது பல தேர்தல்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, சசிகலாவின் வெளியேற்றத்தால் அதிமுகவுக்கு இருக்கும் தேவர் வாக்குவங்கி கரைந்துவிடும் என்பதை ஏற்கமுடியாது.

மாறாக, அவருடைய வெளியேற்றம் காரணமாக நமக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணம் மற்ற சாதிக் காரர்களுக்கு ஏற்படும். அந்த எண்ணம் காரணமாகக் கூடுதல் எழுச்சியுடன் கட்சிப்பணியில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உருவாகும். இது ஒரு லாபம். ஜெயலலிதா எடுக்கும் தவறான முடிவுகளுக்குக் காரணம் சசிகலாவும் அவருடைய குடும்பத்தினரும்தான் என்று தெரிந்தோ, தெரியாமலோ நம்புபவர்கள் மனத்தில் சசிகலாவின் வெளியேற்றம் மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுகவின் மீதும் ஜெயலலிதாவின் மீதும் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தும். இது இரண்டாவது லாபம்.

அடுத்த கேள்வி கட்சி உடைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா?

தற்போதைய அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் சிலரோ பலரோ சசிகலா ஆதரவாளர்களாக இருப்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அவர்கள் அத்தனைபேரும் சசிகலாவுடன் உடனடியாக வெளியேறுவார்கள் என்றோ அல்லது சசிகலாவுக்காக ஜெயலலிதாவிடம் போராடுவார்கள் என்றோ, கட்சியை உடைப்பார்கள் என்றோ எதிர்பார்க்க முடியாது. அதிமுக என்றால் எம்.ஜி.ஆர், இரட்டை இலை, ஜெயலலிதா. இந்த மூன்றும் இல்லாமல் அதிமுக இல்லை என்பது அதிமுகவில் இருக்கும் அத்தனைபேருக்குமே தெரிந்த சங்கதி. அதிலும், ஆளுங்கட்சியாக அதிமுக இருக்கும் நிலையில் சசிகலாவுக்காகக் கட்சித் தலைவியை எதிர்ப்பார்கள் என்பது வெறும் கனவாக மட்டுமே இருக்கும்.

இந்த இடத்தில் ஜெயலலிதாவின் ஆளுமைத்திறன் பற்றிப் பேசவேண்டும். 1972ல் கட்சி தொடங்கிய எம்.ஜி.ஆர் அதற்கடுத்த பதினைந்தாவது ஆண்டில் மறைந்துவிட்டார். அதன்பிறகு அதிமுக உடைந்தது. பிறகு ஒருங்கிணைந்த அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜெயலலிதா சுமார் இருபத்தியோரு ஆண்டுகளாக அதே பொறுப்பில் நீடிக்கிறார். சக்தி வாய்ந்த தலைவியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். எம்.ஜி.ஆர் பெற்ற வெற்றியைக் காட்டிலும் ஜெயலலிதா தலைமையில் அதிமுக பெற்ற வெற்றிகள் அபாரமானவை.

ஆட்சிக்கு வந்தது தொடங்கி ஆளுங்கட்சி என்ற அடிப்படையிலேயே தேர்தலைச் சந்தித்தவர் எம்.ஜி.ஆர். சட்டமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து, பலத்த போராட்டங்களுக்குப் பிறகு அதிமுக ஆட்சியைப் பிடித்த சாதனை எதுவும் எம்.ஜி.ஆர் காலத்தில் செய்யப்படவில்லை. மாறாக, ஜெயலலிதாவின் தலைமையில் செயல்படத் தொடங்கிய அதிமுக, இரண்டு முறை அபார வெற்றியைப் பெற்றுள்ளது; இரண்டு முறை தோல்வி அடைந்துள்ளது. தோல்விப் பள்ளத்தாக்கில் துவண்டு கிடந்த அதிமுகவை பலமுறை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்திருக்கிறார் ஜெயலலிதா.

இத்தகைய வெற்றிகளுக்கு எம்.ஜி.ஆருக்கு இருந்த மக்கள் செல்வாக்கு மட்டுமே காரணம் அல்ல. ஜெயலலிதாவின் உழைப்பைச் சொல்லவேண்டும். சூறாவளிப் பிரசாரத்தைச் சொல்லவேண்டும். நிர்வாகத்திறனைக் குறிப்பிட வேண்டும். எம்.ஜி.ஆர் வாக்குவங்கி என்பது அடிப்படை பலம். அதிமுகவின் வெற்றிக்கு எம்.ஜி.ஆர் வாக்குவங்கி மட்டும்தான் காரணம் என்றால் அவருடைய மரணத்துக்குப் பிறகு இரண்டு முறை அதிமுக தோற்றிருக்க வாய்ப்பில்லை. ஆகவே, எம்.ஜி.ஆருக்கென்று மக்கள் செல்வாக்கு இருப்பது போலவே ஜெயலலிதாவுக்கென்று மக்கள் செல்வாக்கு உருவாகியிருப்பதை உதாசீனம் செய்துவிடமுடியாது.

தவிரவும், வாக்குகளை வசீகரிக்கும் சக்தி என்பது அதிமுகவைப் பொறுத்தவரை ஜெயலலிதா வசம்தான் இருக்கிறதே தவிர சசிகலா உள்ளிட்ட எவருக்குமே கிடையாது. ஒருவேளை சசிகலா உள்ளிட்டோருக்கு அப்படியொரு நம்பிக்கை இருந்தால்.. அய்யோ பாவம்! இதை சசிகலா குழுவினர் உணர்ந்திருப்பார்களா என்பது தெரியாது. ஆனால் கட்சிக்காரர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். கட்சியின் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்களும் உணர்ந்திருப்பார்கள். ஆகவே, கட்சி உடைவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை.

இறுதியாக, ஜெயலலிதா – சசிகலா மீண்டும் இணைவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா?

கலைஞர் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மட்டும்தான் கண்கள் பனிக்கவேண்டும்; இதயம் இனிக்கவேண்டும் என்ற அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

கட்டுரையை முடித்துவிட்டு தொலைக்காட்சியைப் பார்த்தேன். அம்மா அறிவித்த பட்டியலில் எந்தவிதமான மாற்றமுமில்லை. அப்பாடா!

தமிழனுக்கு சொரணை வந்துவிட்டது!

முப்பத்து மூன்றாவது வட்டக் கழகத்தின் சார்பாக அண்ணன் அவர்களுக்கு இந்தக் கைத்தறி ஆடையை அணிவிக்… என்ற வாக்கியங்கள் ஒலிக்கும் தெருமுனைக் கூட்டங்களுக்குச் செல்வது எனக்குப் பிடித்தமான காரியம். வழக்கு, நீதிமன்ற அவமதிப்பு என்ற எந்த வார்த்தைக்கும் பயப்படாமல் மனத்தில் பட்டதைப் பளிச்சென்று பேசுவார்கள் உள்ளூர்க் கட்சிக்காரர்கள். சுவாரஸ்யமாக இருக்கும்.

சொந்த ஊரில் இருந்தபோது கட்சி வித்தியாசம் இல்லாமல் பல கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். சென்னைக்கு வந்தபிறகு அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அந்தக் கவலையைப் போக்கியது கடந்த வெள்ளிக்கிழமை வளசரவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டம்.

பேருந்தை விட்டு இறங்கியபோது கண்ணில் பட்டது அந்தச் சுவரொட்டி. ஜெயா அரசின் பால் விலை உயர்வு மற்றும் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து வளசரவாக்கம் நகர திமுக சார்பில் கூட்டம். யார் சிறப்புப் பேச்சாளர் என்று பார்த்தேன். பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பேசுகிறார் என்று தெரிந்தது. ஏதோ ஒரு வட்டச்செயலாளர் வரவேற்புரை ஆற்றிக் கொண்டிருந்தார். அதிகம் கூட்டமில்லை. வசதியாக ஒரு நாற்காலியைப் பிடித்து உட்கார்ந்துகொண்டேன்.

சுப.வீ பேசத் தொடங்குவதற்கு முன்னால் ஐந்தாறு பேர் பேசினார்கள். பேச வந்த ஒவ்வொருவருக்கும் ஏகப்பட்ட சால்வைகள், துண்டுகள், புத்தகங்கள். சுப.வீயை அறிமுகம் செய்துவைக்க கட்சிக்காரர் ஒருவர் வந்தார். இங்க இருக்குற எத்தன பேருக்கு வீரபாண்டியனைத் தெரியும் என்று கூட்டத்தினரைப் பார்த்துக் கேட்டார்.

அடுத்து என்ன சொல்லப்போகிறாரோ என்று நினைத்துக்கொண்டே சுப.வீயைப் பார்த்தேன். சிரித்தபடியே அந்த நபரைப் பார்த்துக் கொண்டிருந்தார். எனக்கே ஒன்ற வருஷமாத்தான் தெரியும். இங்கதான் இவரோட வூடு இருக்குதாம். உங்களுக்கு வேணும்னா இவரைத் தெரியாம இருக்கலாம், ஆனா மலேசியாவுல போய் கேட்டுப்பாருங்க.. ஈழத்துல போய் கேட்டுப்பாருங்க.. எல்லாருக்கும் தெரியும் என்று சொல்லிவிட்டு சுப.வீயைப் பேச அழைத்தார்.

மைக்கை நெருங்கும்போதே கட்சிக்காரர்கள் சூழ்ந்துகொண்டனர். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட சால்வைகள். மரியாதை செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லத் திணறிக் கொண்டிருந்தார் சுப.வீ. மைக்கை நெருங்க விடுவார்களா என்ற சந்தேகமே வந்துவிட்டது. நல்லவேளையாக கூட்ட நிர்வாகி ஒருவரின் தலையீட்டுக்குப் பிறகு சுப.வீக்கு மைக் கிடைத்தது.

பேசுவதைப் பதிவுசெய்யலாம் என்று மொபலை எடுத்து ஆன் செய்தேன். எங்கிருந்து வந்தார் என்று தெரியவில்லை. திடீரென ஒரு குடிமகன் வந்து எனக்கு அருகில் அமர்ந்தார். மகா மட்டமான சரக்கு என்று நினைக்கிறேன். வாடை, வாட்டி வதைத்தது. குடிவெறியில் அவ்வப்போது சத்தம்போட்டு உளறினார். தளபதியை வாழ்த்தி கோஷம் எழுப்பவும் தவறவில்லை. குடிமகனின் வருகையைத் தொடர்ந்து சுப.வீயின் பேச்சைப் பதிவுசெய்யும் எண்ணத்தைக் கைவிட்டுப் பேச்சைக் கவனிக்கத் தொடங்கினேன்.

கலைஞரின் பால்ய கால நண்பர் தென்னனின் மறைவு குறித்துப் பேசத் தொடங்கினார் சுப.வீ. காரணம் இருந்தது. அந்தக் கண்டனக் கூட்டத்துக்கு டி.ஆர்.பாலுவும் வருவதாக இருந்ததாம். மறைந்த தென்னனுக்கு இறுதி மரியாதை செலுத்த பாலு திருவாரூர் சென்றுவிட்டதால் தான் மட்டும் வந்திருப்பதாகச் சொல்லிவிட்டுப் பேசத் தொடங்கினார் சுப.வீ.

விலைவாசி மற்றும் பேருந்துக் கட்டணம் பற்றித்தான் கூட்டம் என்றபோதும் முல்லைப்பெரியாறு பற்றித்தான் அதிகம் பேசினார். தமிழ்நாட்டில் ஆண்டுக்கு எவ்வளவு மழை பொழிகிறது, கேரளாவில் எவ்வளவு, சிரபுஞ்சியில் எவ்வளவு என்று புள்ளிவிவரங்களுடன் பேசியபோது கூட்டத்தில் நிசப்தம். துண்டுச்சீட்டு ஒன்றில் புள்ளிவிவரங்களை எல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார் ஒரு இளைஞர். வெள்ளை சட்டை. கறுப்பு பேண்ட். அநேகமாக வளர்ந்துவரும் வட்டச்செயலாளராக இருப்பார் என்று நினைக்கிறேன்.

கேரளாவில் தமிழர்கள் தாக்கப்படுவது பற்றிப் பேசத் தொடங்கிய போது உடன்பிறப்புகள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். கேரளாவுக்கு வேலைக்குச் செல்லும் தமிழ்ப்பெண்கள் மீது பாலியல் ரீதியான தாக்குதல்கள் தொடுக்கப்படுவதைக் கண்டித்தார் சுப.வீ. தமிழ்நாட்டில் மலையாளிகளின் வணிக நிறுவனங்கள் தாக்கப்படுவது பற்றியும் பேசினார். சமீபகாலமாக வருகின்ற செய்திகளைப் பார்த்தேன்; தமிழனுக்கு சொரணை வந்துவிட்டதே என்று ஆச்சரியப்பட்டேன் என்றார். அதேசமயம் வன்முறையை தான் ஆதரிக்கவில்லை என்பதையும் சொல்லத் தவறவில்லை.

தமிழர்கள் மலையாளிகள் மீது தாக்குதல் நடத்தும்போதுகூட எத்தனை கவனத்துடன் இருக்கிறார்கள் பாருங்கள்.. இங்கே சின்னச்சின்னக் கடைகளை வைத்திருப்பவர்களை எல்லாம் யாரும் அடிக்கவில்லை. தமிழனைச் சுரண்டுகின்ற பெரிய பெரிய முதலாளிகளின் நிறுவனங்களைத்தான் அடிக்கிறார்கள் என்று சொன்னபோது விசில் சத்தம். ஆலுக்காஸைப் பத்திப் பேசுங்க தலைவா என்று குரல் எழுப்பினார் ஒரு உடன்பிறப்பு. எங்களுக்குத்

தண்ணீர் கொடுக்க மறுக்கிறீர்களே, நாங்கள் நினைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? உங்களுக்கு சோறு கிடைக்காது. காய்கறி கிடைக்காது. பட்டினிதான். உங்கள் வாழ்க்கையே கேள்விக் குறி ஆகிவிடும் என்று எச்சரித்தபோது பலத்த கைத்தட்டல். திடீரென என் காதுக்கருகில் குறட்டைச் சத்தம். உபயம்: அருகில் அமர்ந்திருந்த குடிமகன்.

பால் விலை உயர்வு, பேருந்துக்கட்டண உயர்வு, நூலக இடமாற்றம், சமச்சீர்கல்வி, மக்கள் நலப்பணியாளர் பற்றியெல்லாம் பேசியவர் இறுதியாக தமிழகத்தில் மோசமான ஆட்சி நடப்பதை நீங்கள் ஒப்புக்கொள்வது முக்கியம் இல்லை. நான் ஒப்புக்கொள்வது முக்கியமில்லை. எல்லாவற்றையும் விட முக்கியமான ஒருவர் சமீபத்தில் ஒப்புக்கொண்டுவிட்டார். அவர்தான் விஜயகாந்த். பாருங்கள்… விஜயகாந்துக்க்க்க்கேகேகேகே.. புரிந்துவிட்டதாம், இது மோசமான ஆட்சி என்று. அப்படி என்றால் கடைக்கோடித் தமிழனுக்கும் புரிந்துவிட்டதாகத்தானே அர்த்தம் என்றார். கூட்டம் வெடித்துச் சிரித்தது!

பழ. நெடுமாறன் Vs இந்திரா காந்தி

விடுமுறை தினங்களில் நான் அடிக்கடி செல்லும் இடம் பெரியார் திடல் நூலகம். எப்போது சென்றாலும் ஏதோ ஒரு புத்தகம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த சனிக்கிழமை போனபோது பெங்களூர் முதல் புதுடெல்லி வரை என்றொரு புத்தகம் கண்ணில்பட்டது. எழுதியவர் பழ. நெடுமாறன். அநேகமாக ஈழம் பற்றிய புத்தகம் என்ற எண்ணத்தில் எடுத்தேன். பெங்களூர் சார்க் மாநாடு தொடங்கி டெல்லியில் ராஜீவ் காந்தியுடனான சந்திப்பு பற்றிய புத்தகம் என்றுதான் நினைத்தேன்.

முற்றிலும் மாறுபட்ட புத்தகம். அறுபதுகளின் இறுதியில் இந்திய தேசிய காங்கிரஸில் ஏற்பட்ட பிளவைப் பற்றிய புத்தகம் அது. குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தொடங்கி அந்தக் காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர்களுக்குள் நிலவிய மோதல்கள் வரை பல விஷயங்களைப் பதிவுசெய்திருந்தார் நெடுமாறன். எளிமையான நடை. படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருந்தது.

பிளவுக்கு முன்பும் பின்பும் காமராஜரின் பக்கமே இருந்தவர் பழ. நெடுமாறன். புத்தகம் நெடுக இந்திரா காந்தியை விமரிசிப்பதற்கு   அவர் பயன்படுத்தியுள்ள வார்த்தைகள் அதிர்ச்சியைக் கொடுக்கின்றன. புத்தகத்துக்கு அணிந்துரை எழுதியவர் ஈ.வெ.கி. சம்பத்.

இந்தப் புத்தகத்தில் இந்திராவைப் பற்றி முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் பதிவுசெய்திருக்கிறார் பழ.நெடுமாறன். மதுரையில் நடந்த கொலைவெறித் தாக்குதலில்  இருந்து இந்திராவைக் காப்பாற்றியவர் நெடுமாறன் என்ற தகவலை மட்டும் கேட்டிருப்பவர்களுக்கு இந்தப் புத்தகம் புதிய தரிசனங்களைக் கொடுக்கும்.

காமராஜருக்கு நெடுமாறனின் கண்ணீர்க் கடிதங்கள் மற்றும் சட்டமன்றத்தில் நமது குரல் என்ற இரண்டு புத்தகங்களையும் படித்தேன். இரண்டு புத்தகங்களுக்கும் ஆசிரியர் பழ.நெடுமாறன்தான்.

நான் எழுதிய / எழுதிவரும் தொடர்கள்

1.    கலகம் பிறந்தது எனக்காக!

அத்வானி, நரேந்திர மோடி, சுப்ரமணியன் சுவாமி, மாயாவதி, ஜெயலலிதா போன்ற இந்தியாவின் சர்ச்சைக்குரிய பிரபலங்கள் பற்றி கல்கி வார இதழில் வெளியான தொடர். விடுபட்டவர்களையும்
புதிய நபர்களையும் இணைத்து முழுமையாக்கி, புத்தகமாக்கும் திட்டம் உள்ளது.

2.    அகம் புறம் ஐ.பி.எல்

விளையாட்டு, அரசியல், சினிமா மூன்றும் ஒன்றிணைந்த புள்ளி ஐ.பி.எல். இந்தியன் பிரிமியர் லீக்
என்ற பெயரில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய பண விளையாட்டுகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வரும் வகையில் எழுதப்பட்ட தொடர். குமுதம் ரிப்போர்ட்டர் வாரமிருமுறை இதழில் வெளியானது. கிழக்கு பதிப்பகத்தின் சகோதரப் பதிப்பான மினிமேக்ஸ் மூலம் புத்தகமாக வெளியாகியுள்ளது.

3.    எதிரி ஜாதகம்

ஒரே சமயத்தில் சகோதரத்துவ நாடாகாவும் எதிரி நாடாகவும் இருக்கும் பாகிஸ்தானின் அரசியல் வரலாற்றைப் பதிவு செய்யும் முயற்சியே இந்தத் தொடர். 2008 மும்பை தாக்குதல் நடந்த சமயத்தில் பாகிஸ்தானின் அரசியல், ராணுவ வரலாறை ஜூனியர் விகடன் வாரமிருமுறை இதழில் எழுதினேன். இருபத்தைந்து அத்தியாங்களைக் கடந்த அந்தத் தொடர் வாசகர் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றது. விகடன் பிரசுரம் இந்தத் தொடரைப் புத்தகமாகவும் வெளியிட்டது.

4.    கனவாகிப்போன கச்சத்தீவு

நடந்து முடிந்த நிகழ்வாக நினைக்க முடியாத, நம் உணர்வோடும் உயிரோடும் பிணைந்துள்ள ஒரு முக்கிய பிரச்னை. விஷய சேகரிப்புக்கான ஆய்வில் ஈடுபட்டபோது கச்சத்தீவு கைமாறியது பற்றிய அரசியல், சமூகப் பின்னணிகள் முழுமையாகத் தெரியவந்தன. சூரியகதிர் வார இதழில் வெளியான இத்தொடர் பிரச்னையின் ஆரம்பப்புள்ளி தொடங்கி இன்றளவும் தமிழகத்தின் தலையாயப் பிரச்னையாக நீடிக்கும் தமிழக மீனவர்கள் கடத்தல் வரையிலான நிகழ்வுகளை அலசுகிறது. இந்த அலசலை இன்னும் நீட்டித்து, புத்தக வடிவில் கொண்டுவர உள்ளேன். எதிர்வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

5.    க

நம் காலத்தில் அதிகம் விமரிசிக்கப்பட்ட, அதிகம் பழிக்கப்பட்ட அரசியல் தலைவர், மு. கருணாநிதி. வெறுப்புடனும் விருப்பத்துடனும் அவரை அணுகி எழுதப்பட்ட புத்தகங்களைக் கடந்து, கூடுமானவரை நடுநிலையுடன் அவரது வாழ்வையும் பணியையும் ஆராயும் முயற்சியே இந்தத் தொடர். தமிழ் பேப்பர் இணைய இதழில் கடந்த எட்டு மாதங்களாக வெளிவந்துகொண்டிருக்கும் இந்தத்தொடர், திராவிட இயக்க வரலாற்றில் கருணாநிதியின் இடத்தைத் திட்டவட்டமாகச் சுட்டிக்காட்டுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் கருணாநிதியின் பங்களிப்பையும் அலசுகிறது. 2012 புத்தகக் கண்காட்சிக்குப் பிறகு இது புத்தகமாக வெளிவரும்.

6.    ஆடு.. புலி.. அரசியல்!

சுதந்தரத்துக்குப் பிறகான முக்கிய தமிழக அரசியல் நிகழ்வுகளை தகுந்த வரலாற்றுப் பின்புலத்தில் பொருத்திப் பார்க்கும்போதுதான் அதன் ஆழமும் அகலமும் முழுமையாகப் பிடிபடுகிறது. ஆடு, புலி, அரசியல் அப்படிப்பட்ட ஒரு முயற்சி. தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளிவரும் இந்தத் தொடர், வாசகர்களின் பாராட்டுகளையும் விமரிசனங்களையும் ஒருங்கே எதிர்கொண்டுவருகிறது. நாற்பதாவது அத்தியாயத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது இந்தத் தொடர்!